அன்பின் நண்ப ஜனா...

அன்பின் நண்ப ஜனா... நலமே வாழ்க

அன்டறொரு நாள்
புத்தி புரியா காலங்களில்
ஒட்டிக் கொண்டது நம் உறவு
ஓசை இல்லாத பாசிக்குடாவாய் நீயும்
மௌனம் மறந்த மார்க்கெட்டாய் நானும்
மனங்களை மாற்றிக் கொண்டதை
எப்போது நினைக்கையிலும்
எட்டாவது அதிசயந்தான்

டா' என்று உரிமை எடுக்க
முட்கம்பி வேலி போட்டு
முன்னுக்கு உட்காந்திருந்தது
உன் மாமியின் டாக்டர் பட்டம்
அது எமது முதல் ஜென்மம்
இப்போதும் ஒட்டிக் கொண்டே
தொடர்கிறது....

திருமணத்திற்கும் நட்புக்கும்
பெரிய வித்தியாசமில்லை
திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது
நட்பு
நிச்சயிக்கப்படும் இடம்
சொர்க்கமாகின்றது

அப்போதெல்லாம்
நீ
பிறருடன் நெருங்கிப் பழகினால்
என் நெஞ்சுக்கு வலிக்கும்
இப்போது முடியாது
அந்த உரிமையை
உன் மனைவிக்கு மாற்றியிருப்பாய்.
ஆனாலும்
சட்டியோடு ஒட்டிய
மீன்குழம்பாய்
இப்போதும் என்னுள்
ஒட்டிக் கொண்டே இருக்கிறது.
உனக்கும் அப்படியா?

நாம்
துள்ளித்திரிந்த
பள்ளிக் காலத்தை நினைத்தால்
காய்ந்த
சுள்ளிக் குச்சியிலும்
துளிர் தெரியும்
அவற்றை அள்ளி எடுத்து
அசைபோட்டுப் பார்க்கையில்
மனசுக்குள்
ஏஆர் றகுமானின் -மெல்
இசை கேட்கும்
உனக்கும் அப்படியா?

தரம் ஐந்து அப்போது அது
வகுப்பு ஐந்தென்றிருந்தது
இப்போது அது
மறக்க முடியாத மந்திர வார்த்தை
அது ஒரு ராஜ்யம்
குலேந்திரராசா அதன் ராஜா
'99 புள்ளி எடுத்தால் ஒரு அடி'
இது தான்
அந்த ராஜ்யத்தின் இராஜ வாக்கியம்
பூச்சிம் எடுத்தவன் கதி....
தண்டனை நிறைவேற்ற
எத்தனை பிரம்புகள் தவம் கிடக்கும்

உன் மோதிரம் நெளித்த
பிரம்புக் குச்சியை
நான்
முறைத்துப் பார்த்ததை
உன்னால் உணர முடிந்ததா?

அப்போது ரணமான நிகழ்வுகள் எல்லாம்
இப்போது ரசனையான நினைவுகளாய்
எப்படி மாறின?

ஆழ்பவன் ஒரு நாள் வீழ்வான்
என்பதை நம் உறவிலும்
நிரூபித்துக் காட்டியது 'முருகன்' சண்டை
ஆனால்....
முள்ளிவாய்க்காலில் மட்டும்;
எப்படி அது பொய்யானது?
சீச்சி மெய்தாய்
ஆப்போது ஆண்டவன் 'அண்ணன்' அல்லவா?
மீண்டும் வருவான்
நம் நட்புப் போல.....

அதெப்படி
நம் நட்பை எழுத மட்டும்
என் பேனாவுக்கு
இறக்கை முளைத்தது?
துரப்பிடித்திருந்த அதன் முனை
துலங்கியதெப்படி?

மரணம்
உன் தாத்தாவை மட்டுமல்ல
உன்னிடமிருந்து பிரித்தது
நம் நட்பையும் தான்.

அதன்பின் நம் நட்பென்ற முழுநிலவு
மூன்றாம் பிறையானது
பின் முழுதாய் மறைந்தது.
கிரகணத்தில் நிலவைக் கவ்விய பாம்பாய்
நம் உறவைக் கவ்வியது சிவானந்தா

என்றாலும்
காலம் விசித்திரமானது
சிவானந்தாவை எனக்கும் நண்பனாக்கியது
எனது 9ஏ ஓ.எல் முடிவு

சிவானந்தா நம் நட்பை விழுங்கினாலும்
அதனால் அதை ஜீரணிக்க முடியாததை
உன் திருமணத்தில் நிரூபித்தது
யுவனின் வரவு...
அவன் நமக்குத் தெரியாமலே
நமக்கு நண்பனாய் இருந்திருக்கிறான்
உனக்கும் எனக்குமாய்....

நீண்ட இடைவெளிக்குப் பின்
குறிஞ்சி பூத்தாற் போல்
12 வருடங்களுக்குப் பின்
மீண்டும் பூத்திருக்கிறது நம் நட்பு
அது தொடர....
குறிஞ்சியை
காகிதத்தில் செய்ய விரும்பவில்லை
அதற்கு மணமிருக்காது....
அதைக் களவாடும்
களைகளை கத்தரிக்க நினைக்கிறேன்
காயப்படுத்தும்
காற்றைக் கட்டி வைக்கப் பாக்கிறேன்
என் கல்லறை மட்டும்
அதன் மணம் பரவ....

அந்தப் 12 வருடங்கள்
பாழாய்ப் போனதாய் ஓர் உனர்வு
உன்னாலும் உணர ஒண்ணுதா?
உண்மையைச் சொல்கிறேன்
12 வருடங்களில் உன்னை
பல தடைவ நினைக்க வில்லை...
ஆனாலும் சில தடவைகள்
பலமாக நினைத்திருக்கிறேன்....
ஆம்...
உனக்குப் புரையேறிய
அந்த நிமிடங்களில் தான்....
அதிலும் பல தடவைகள்
ரத்தம் உறையும்
யுத்தச் செய்தியின் போது....
அப்போது உனக்கு
என்னை நினைக்க நேரம் இருந்திருக்காது
நீ..
தமிழனையும் தமிழையும் அல்லவா
நினைத்திருப்பாய்...

நட்பைப் பேசும் இடங்களில் எல்லாம்
என் நண்பர் கூட்டத்தில்
உன்னைப் பற்றிய கதை
முந்திக் கொள்வது
என்னைப் போன்றே
என் நண்பர்களுக்கும்
என்னில் எரிச்சலை ஊட்டியிருக்கும்
என்ன செய்வது?
அதைத் தடுக்'க முடியாது...

மீண்டும் தொடர்பு
மிக்க மகிழ்ச்சி
பாவம் பக்கத்தில் நின்றவர்கள்
நம் 12 வருட
நினைவுகளை
அவர்களுடன் அல்லவா மீட்டியிருந்தேன்
அப்படி ஒரு மகிழ்ச்சி
உனக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்

வர்ணிக்க வார்த்தையில்லாமல்
தவித்திருப்பாய்
வானத்தை எட்டிப் பிடித்ததாய்
உணர்ந்திருப்பாய்
இன்ப வலியை
இருதயம் அனுபவித்திருக்கும்
சொல்ல முடியாத ஏதோ ஒன்றால்
அவஸ்த்தைப் பட்டிருப்பாய்
அந்த அவஸ்த்தை
ஆனந்த எல்லையை உடைத்திருக்கும்
ஏனென்றால்
எனக்கும் அப்படித்தான் இருந்தது.

'பிரம்மன்'
உன்னோடு இல்லா விட்டாலும்
உன் நினைவுகளோடு
நான் பார்த்த முதல் திரைப்படம்
இக் கவிதை
முதல் மூச்சு விட
முட்டி மோதிய கருவறை

என்றாலும்
இப்போது நினைக்கையில்
உன்னிடம் உரிமைக் கோபத்தில்
ஒரு கேள்வி....
மட்டக்களப்பில்
உன் 1 வருட
அஞ்ஞாத வாசத்தில்
புதுக்குடியிருப்புமா உனக்குப்
புது – குடியிருப்பு?

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments