சொல்லாக் காதல்

 ஒல்லிய இடையுடைப் பெண்ணாள்
    ஒழுக்கத்தில் அவளொரு நல்லாள்
சொல்லிடில் அவளெழில் இந்நாள்
    சோர்ந்துமே போயிடும் தன்னால்

மின்னிடும் மாதுளைப் பல்லாள்
    செந்தமிழ் தோத்திடும் சொல்லாள்
தன்னிகரற்ரொரு மெல்லாள்
    தரணியே சாய்ந்திடுமவள் பின்னால்

மல்லிகை இதழுருக் கண்ணாள்
    மஞ்சளின் நிறமனைப் பெண்ணாள்
அல்லியின் ஒருபிடிச் செண்டால்
    அள்ளியே எனைக் கொண்டு சென்றாள்

வேறு….

தேவலோகத்துத் தேவதையோ இவள்
    தேகம் உலோகத்தில் பொன் ரதமோ!
மேவ மாதரும் தோன்றலையோ? இவள்
    மேனியழகிலே பாதியிற் பாதியிவை

அன்ன நடையுடன் பின்னலடிபட
    தன்னந் தனிமையில் போறவளே!
எந்த னுடனொரு வண்ணக் கிளியனை
    உந்தன் வாய்மொழி கூறடியே!

தோழியரும் உனைக் கேலிகள் செய்யினும்
    ஆழிபோல் நீயெழுந் தேசல்லையே!
நாளிகையாயினும் நானிருந் துன்மொழி
    கேளாமற் போய்விடில் வாழ்வில்லையே!

எண்ணியே யுனைதினம் உன்னையே உண்மையாய்
    பண்ணினேன் காதலும் நானடியே – பதில்
தன்மையாய்த் தந்திடில் பாக்கியம் ஆனவன்
    என்னிலும் பாரிலே யார் கிளியே!


காதலைக் கூறியும் காதிலே ஏற்றிடா
    காரணம் என்னவோ கூறிடுவாய்
சாதலை மீறியோர் தோதில்லை யானுக்கு
    வாரணம் ஏகிநான்  மாய்திடுவேன்

கொஞ்சம் பொறுவென வஞ்சி தோழியர்
கெஞ்சி பதில் மொழி கூறிடவே
நெஞ்சு நெகிழ்ந்தது நாடி நிறைந்தது
    பஞ்சு போ லென்னுடம் பாகியதே!

பாவை தோழியர் பறைந்த பதிலிலே
    பாவம் நாயகன் பரிதவித்தான்
பூவை மேல்படர் காதல் வேகத்தில்
    சைகை மொழிதனை அவன் பயின்றான்.

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments