வைகாசித் திங்கள்

மட்டக்களப்பெங்கும் வைகாசித்திங்களில்
மண்ணும் மணக்கின்றது - அங்கே
பட்டி தொட்டியெங்கும் கண்ணகி
பாடலால் காதும் குளிர்கின்றது.

பறையொலி முழக்கமும் குழல்நய ஓசையும்
பண்பாடு சொல்கின்றது - அங்கே
நிறைமகள் கண்ணகி கோயில்கள் தோறும்
நிலவொளி தோற்கின்றது.

உருக்கொண்ட காவடி ஓசைகளங்கே
ஊரெல்லாம் ஒலிக்கின்றது -எல்லாத்
தெருக்களும் அங்கே திருவிழாக் காணவே
தவக்கோலம் பூண்கின்றது.

கும்மி குரவையும் கூத்தும் வசந்தனும்
குறையாது நிறைகின்றது - அங்கே
அம்மியின் ஓசையும் எண்ணையின் வாசமும்
அடியோடு ஒழிகின்றது.

பொரித்தலும் வறுத்தலும் சுண்டலும் அங்கே
புதையுண்டு போகின்றது - எங்கும்
சிரித்தலும் சிந்துவும் ஆட்டமும் தானே
சிறப்புடன் வாழ்கின்றது.


கதவு திறத்தலும் கலைகள் படைத்தலும்
காவியம் பாடலுமே - அங்கே
முதலிடம் பெற்றதாய் முக்கியமாகவே
முன்வந்து நிற்கின்றது.

பூசை புனஸ்காரம் புண்ணிய வேலைகள்
பூம்பந்தல் கட்டுதலும் - வெடி
ஓசையும் கோயிலின் வாசலிலே வந்து
ஓரமாய் நிற்கின்றது.

நாடு கடந்தவர் வீடு மறந்தவர்
நாதிகள் மறந்திடினும் - இங்கே
பாடுபட்டேயவர் ஊருக்கு வந்துமே
பாடித் திரிந்திடுவார்

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments